இலவசம்

லாரியோட்டும்
எங்கப்பன்
தந்தானய்யா
எங்கம்மாவுக்கும்
எனக்கும்
இலவசமாய்...
எய்ட்ஸ்.
.................................................................
நவம்பர் '06 - தேன்கூடு போட்டிக்காக.

காதல் நிலா

ஊடலில்...
மறைந்து...
தோன்றி...
மகிழ்வூட்டுகிறாயே
காதலே!!

முகிலிடம் விளையாடும்
நிலவைப் போலவே.

நண்பன்

நண்பன் தான்.

உணர்வால்...
உடலால்...
மெள்ள...
பிரிந்து...

பிரிந்து...

பிரிந்து போய்...

பகைவனானான்.

காதல் எதிரிகள்..

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே
கைகோர்த்தது
நம் காதல்.

எதிர்ப்புகள் யார்?

நம்மைக் காதலித்த
பெற்றோர்கள் தான்.

வாழ்வோம் வா

போதுமம்மா
நாம் காதலித்தது!
அதைக்
காதலர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வாழ்க்கை
நம்மை காதலிக்கிறதாம்..
வா..

வாழ்க்கையை
நாம்
காதலிப்போம்.

நீயும் நானும்

நீயும் நானும்

வேறு வேறாகவே
இருந்திருக்கலாம்...

நானும் நீயும்

காதலிக்காமல்
இருந்திருந்தால்.

பிரிவு

பிள்ளை பெற
தாய்வீடு செல்கிறாய்
நீ..
பிரிவின் வலியில் துடிக்கிறேன்
நான்.

வயது

நம் காதலின்
வயதைக் கேட்டார்கள்.

சொன்னேன்.

7 ஜென்மங்களென்று.

சாதி

விண்ணப்பத்தில் குறிப்பிடாததால்...
பள்ளியில் கேட்டார்களாம்
நம் பிள்ளையை...

"நீ எந்த மகரந்தத்தின் பூ?" - என்று!

நம் கதையில் ஒரு சம்பவம்.

பேருந்தில் நம் கிராமத்திற்கு சென்றோம்
அருகருகே அமர்ந்து.

அமர்ந்த சற்றுநேரத்தில்
தோள்மீது சாய்ந்து தூங்கிவிட்டாய்.

உன் தூக்கம் கலைக்க மனமில்லாமல்
அடுத்த கிராமத்தில் நீயாய் எழ
அன்புச்சண்டையுடன்
மீண்டும் ஊர் திரும்பியது
சரித்திரம்.

வாசம்!

பூக்கடைக்காரன் மனைவி:
"அத்தான், சாப்பிட வாங்க, மீன் கொழம்பு வெச்சிருக்கேன்".

அவன் சொன்னான்,

"இரும்மா, கையெல்லாம் பூநாத்தம்
சோப்பு போட்டு கழுவீட்டு வர்றேன்!"

பத்தவெச்சிட்டயே பரட்ட..

நம்பிக்கை

பயத்தைப்போக்க
நீ பற்றவைத்த
ஒற்றை பீடியில்
வைக்கும் நம்பிக்கையை
அதைத் தாங்கிக்கொண்டிருக்கும்
விரல்களின் மீது வைத்தால் என்ன?

பெயர்

எல்லா கவிஞர்களும்
எழுதிவிட்டார்கள்
காதலைப்பற்றி.

நான் மட்டும் என்ன செய்ய?

எழுதினேன்.

உன் பெயரை.

ஏன்?

உதிப்பதிலும்
மறைவதிலும்
அழகாய்த்தானிருக்கிறாய்
ஆதவனே!
மதியம் மட்டும்
ஏன்
அந்தக் காய் காய்கிறாய்?

ம்..~?!

அன்பே!
நாமிருவரும்
ஒரே நொடியில்
இறந்தோமே...

அதைப்பற்றி
இவர்கள்
என்ன பேசிக்கொள்வார்கள்?

உதிரிபூக்கள்

நான் கொடுத்த
எல்லாக் கடிதங்களையும்
கிழித்தெரிந்தாய் நீ.
அத்தனையும்
உதிரிப்பூக்களாய்
உன் காலடியில்.

எனக்கு நிம்மதி.

இனி உன் கால்கள்
இந்த பூக்களின் மேல் அல்லவா
நடந்து செல்லும்.

மகனே...????

முந்நாள்
பட்ட காயங்கள்
இந்நாள்
வலியிருக்கும்.

இந்நாள்
வடுக்கள்...

பின் ஆளுக்கு
நினைவிருக்குமா?

யார்..?

முதலில்
காதலை சொன்னது
நீயா?.. நானா?..
என்றெல்லாம் தெரியாது.

எனக்கு தெரிந்ததெல்லாம்
"நாம் காதலிக்கிறோம்".

வலம்

"உன்னைச்
சுற்றியே
என் உலகம்" - என்றேன்,
நீயோ
என்னையே
சுற்றி சுற்றி வருகிறாய்!

படைப்பு

அத்துணை அழகுகளையும்
படைத்துவிட்டு
திருப்திப்படாததால்
உன்னைப் படைத்தான்
பிரம்மன்.

ஏய் செல்லம்..

"முடியாது" என்று மறுத்தாய்,
"மாட்டேன்" என்று அடம்பிடித்தாய்,
"வீட்டில் சொல்லி உன்னை மாட்டிவிடுகிறேன் பார்" என மிரட்டினாய்,
ஆனாலும் உன் சகோதரர்களை என் நண்பர்களாக்கினாய்,
பெற்றோரை அத்தை, மாமா என்று அழைக்க சொன்னாய்...
வீடு வரை... நீ வா... உன் காதல் வரக்கூடாதென்று கட்டளையிட்டாய்...
இன்னும் பல ஜாலங்கள் செய்தாய்...
ஆனாலும்
துரத்தித் துரத்தி என்னை காதலிக்கவைத்து... பின்
என்னை நீ கல்யாணம் கட்டிக்கொண்டாய்.

அடிப்போடி..

வெட்கமாயிருக்கிறது
எனக்கு
எப்படி
ஒரு கவிதையைப்
பற்றியே
கவிதை
படைப்பது!!

காதல் அனுமதி

நன்றி: தபு சங்கர்.
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்! அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பர்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன். 'அய்யோ பாவம்!' என்றார் அப்பா. 'ஏம்ப்பா..?' டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!

ரகசியம்

எனக்கு மட்டுமே
தெரிந்த ரகசியத்தை
அறிய வந்த
வண்ணத்துப்பூச்சி,
உன் வெட்கத்தால்
எப்படி சிவந்துபோயிருக்கிறது
பார்.

வானவில்

தன்னிடமில்லாத
உன் கூந்தல் நிறத்தை
நாணல் கொண்டு
எழுதுகிறது பார்
இந்த வானவில்.

அன்பருவி

இப்படி
உன் அன்பை அருவியாய்க் கொட்டி..
வருடி வருடியே..
கல்லாய் என்னை
சமைத்து
வைத்திருக்கிறாய்
நீ.

எனது பேனா


எதை எழுதினாலும்
கிறுக்கலாய் எழுதிவிட்டு
உன் பெயரை மட்டும்
மிக அழகாய் எழுதுகிறதே!
என் பேனா!

காத்திருப்பு

இந்தப் பிறவி வரை
காத்திருந்து
பெற்றோம்
காதலெனும்
நம் குழந்தையை !

துவாரவாசல்

என் இதயத்தில்
துவாரம் இருப்பதாய்
கண்டுபிடித்தார்கள்...
அது
நீ நுழைந்த வழியென்று
இவர்களுக்கு
தெரியவில்லை போலும்.

இன்சுலின்

சர்க்கரை நோய்
உங்களுக்கும் வரலாமென்று
வைத்தியர் சொன்னார்.
நல்ல வேளை
நீ வந்துசேர்ந்தாய்.
சர்க்கரை நோய்
வருவதற்கான வாய்ப்பில்லை.

விக்கல்

எனக்கு
விக்கல் வரும்போதெல்லாம்
உன்னைத்தான் நினைத்துக் கொள்கிறேன்.

விக்கல் வருவது கூட
நீ நினைப்பதால் தான் என்றால்
கண்ணே...

எப்பொழுதாவது தானா
என்னை நினைத்துக் கொள்கிறாய் !!

கோபம்

என் மேல்
தீராத கோபமென்றால்
என் இதயத்தை
உன்னிடம் தருகின்றேன்,
முற்களால்
குத்திப்பார்த்து
உன்
கோபம் தணித்துக்கொள்.

உன் மலர்க்கைகளில்
இரத்தக்கறை
படிந்துவிட்டால்...
என்னிடம் சொல்.
துடைத்துவிடுகிறேன்.

நிறம்

உன் இதயத்தின் நிறத்தை
ஆராய்ந்த பொழுது
என்
கண்ணீரின் நிறம்
சிவப்பாகிப் போனது.

விடுதலை எப்போது!

(தேன்கூடு போட்டிக்கவிதை)
-------------------------------------
அவனைக் காண வேண்டும்.
சே.. என்ன இரவு,
நீண்ட இரவாக உள்ளதே!
அடடா!
பொழுது விடியும்போது
எல்லோரும்
காணத் துடிக்கும் அவனை
அந்த இளஞ்சூரியனை
நான் காண வேண்டும்.
நினைக்கும் போதே இதமாயிருந்தது.
தூங்கிவிட்டேன்.
காலை வந்துவிட்டதாம்.
சேவல் கூவியதும் எழுந்தேன்.
தட்டுத் தடுமாறி
அவனது அழகிய முகத்தில் விழிக்க
கண்களை மூடிக்கொண்டு சென்றேன்.
வெளியே வந்துவிட்டது போல் உணர்வு.
தலையை நிமிர்த்தி
கண்களை அகலத்திறந்தேன்.
ஒன்றுமே தெரியவில்லை.
எல்லாமே இருள்.
ஞாபகம் வந்தது..
நான் குருடன் என்று.

எப்படி!

எனது காதலில்
கொஞ்சம் ஆணாதிக்கம்
கலந்துவிட்டது இப்போது.
ஆனால்
நீ மட்டும் எப்படி
நிறம் மாறாமல்
காதலித்துக் கொண்டிருக்கிறாய்...!

பிரிய எதிரிகளே!

எனது
ஆயுதத்தை
தீர்மானித்தது
நீங்கள்தான்
எனது
பிரிய எதிரிகளே!

எண்ணம்


பிறப்பு

ஒவ்வொரு பெண்ணும்
பிறக்கும்போதே
375 கருமுட்டைகளுடன்
பிறக்கிறாளாம்.

நானும் பிறந்தேன்..
உன்னை மட்டுமே
நெஞ்சினுள் தாங்கி.

கனவில் நீ

நேற்று
என் கனவில்
நீ வந்தாய்.
வாசற் கதவைத் திறந்து
"உள்ளே வா" என்றேன்
மகிழ்ச்சிப் பெருக்கோடு.
கனவில் கூட
என்னைக்
காணக்கூடாது என
எச்சரிக்கத்தான் வந்தேன்
என்று சொல்லி சென்றுவிட்டாய்.
கனவில் கூட
கல்நெஞ்சமடி உனக்கு

ளொள்ளு கவிதை-1

நண்பனின் காதலுக்கு
துணை சென்றேன்.
நண்பனின் காதலும்
நன்றாய்தானிருந்தது.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு
நண்பனின் காதலி
என்னிடம் சொன்னாள்
"ஐ லவ் யூ".

கண்ணம்மா!

நீ
கண்ணணாகப்
பிறப்பதாயிருந்தால்
நான்
கம்சனாகப் பிறக்கவே
ஆசைப்படுவேன்.
அப்போது தானே
நீ என் நெஞ்சு பிளப்பாய்!

ஆம்
உன்
கைகளால் இறப்பதையே
பெருமையாய் நினைக்கிறேன்.

இப்போது நடைபிணமாய்
இருப்பதைக் காட்டிலும்.

போதி மரம்

மனிதா!
இன்னும் நீ ஏன் உணரவில்லை
உனக்கு நீதான் போதி மரமென்று!

நீ சித்தார்த்தனாகவே இரு,
புத்தனாக வேண்டிய கட்டாயமில்லை.

நீ கௌசிகனாகவே இரு,
விசுவாமித்திரனாக வேண்டிய அவசியமில்லை.

நீ உன்னையிழந்து
செய்யும் செயல்களிலெல்லாம்..
உனக்கு நீயே போதி மரமாவாய்.

நீ சுயநலவாதியாய் இருப்பின்,
உனது அழிவே உனக்கு போதி மரம்.

நீ பேராசைக்காரனாய் இருப்பின்,
உனது இழப்பே உனக்கு போதி மரம்.

நீ கொள்ளையனாய் இருப்பின்,
உன் மன உறுத்தல்களே உனக்கு போதி மரம்.

நீ ஊதாரியாய் இருப்பின்,
உன் நோயே உனக்கு போதி மரம்.

ஆம்.

செய்யப்போகும் செயல்களுக்கு
நீ எஜமானி.

செய்த செயல்கள்
உனக்கு எஜமானி.

ரசிப்பு

பல் பிடுங்கப்பட்ட
பாம்புடன் நடித்தார்
சிரிப்பு நடிகர்.
32 பற்களும் தெரிய
சிரித்தனர்
ரசிகர்கள்.

சண்டை

அடிபிடி
சண்டை எதற்கு
நாய்களே
மனிதர்களைப் போல்
வௌ..வௌ..வௌ..

நன்றி:குஞ்ஞுண்ணி கவிதைகள்.

தவம்

என் கண்கள்
எப்போதும்
உன்னை நோக்கியே
இருக்கின்றனவே...
வடக்கு நோக்கியே
தவம் கிடக்கும்
காந்த ஊசியைப்போல்.

குறிஞ்சி பூ

உன்னுடன்
பேசியபோது தான்
தெரிந்தது
நீ
பதினைந்து ஆண்டுகளில்
பூத்த
கன்னிப்பூ
என்று.

நிதர்சனங்கள்

* உடம்பெல்லாம்
வியர்வை நாற்றம்
பூக்கடைக்காரன்.

* வாடிப்போய்
வீடு சேர்ந்தாள்
கீரைக்காரி.

* சாலையோர
துணிக்கடைக்காரன்
ஒற்றை வேட்டியுடன்.

முரண்

சண்டையிட்டுக் கொண்டோம்..
நமக்குள்
இனி
சண்டை வரக்கூடாதென்று.

எழுந்துவா இளைய ஞாயிறே!

இன்று வெட்டிக்கொள்ளும்
வெவ்வேறு சாதிக்காரர்களும்
அன்று மனிதர்களாய் இருந்தபோது
தோளோடு தோள்கொடுத்து
நிமிர்ந்து நின்ற
'மனிதத்தேரை'
மகிழ்ச்சியோடு இழுத்தவர்கள் தான்.
தொழில்கள் காரணமாய்
தென்றலாய்ப் புகுந்த சாதி..
மெது மெதுவே முறுகேறி
மென்னி முறிக்கும்புயலாய் இன்று.

அன்றைய அரிவாள் கதிரறுக்க
இன்றோ கழுத்தறுக்க.

மட்டம் தட்டிப் பேசுவதும்
இருந்தது அன்று வேடிக்கையாய்,
வட்டம் கட்டிப் பேசுவர்
இன்று வெறித்தனமாய்.

அத்தணையும்
பணத்திமிர்,
சாதி வெறி.

வார்த்தைகளில் பூத்தூவிய
வசந்தகாலங்கள்
கோடையானது.
குருதி கொப்பளிக்கும்
இன்றுஅக்னி நட்சத்திரம்.

மனதிற்குள் வெறுப்பு உண்டு
சாதியை வெட்டி எறிய
ஒவ்வொருவருக்கும்,

பழமைகள் அணைபோடுவதால்
தேங்கின எண்ணங்கள்.

அழுத்தம் அதிகமாக்கி
அணையை உடைத்து
எண்ண ஞாயிறே!
எழுந்துவா இச்சிறுமை கண்டு.

இனி பகல் தான்
என்றும் எப்போதும்..
இச்சாதிவெறியும் சாதியும்
ஒழிந்தபின் தான்
காலை, மாலைகள் என
உறுதிகொண்டு
எழுந்துவா இளைய ஞாயிறே!
-------------------------------------------------

15.9.95 அன்று கோவை வானொலியில்
ஒளிபரப்பான எனது கவிதை.

தூண்டில்

புழுவிற்காய்
மீனும்..

மீனுக்காய்
நானும்.

நண்பா!!

இருந்த போதும்
இறந்த போதும்
நிரூபிக்க தவறவில்லை
நீ
இனியவனென்று.
-----------------------------------
கரும்பு சுமை ஏற்றிவரும் லாரி மேலே கவிழ்ந்த விபத்தொன்றில் அகால மரணமடைந்த என் உயிர் நண்பனுக்காக.

காதலித்துப்பார்!


முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்.

நன்றி: நிலவுநண்பன்.

தொடர்பு

விதைகளை
நட்டுச்சென்றாய்
பூமி பூப்பூத்தது.

மலர்களை
கொய்து சென்றாய்
வானம்
கண்ணீர் விட்டது.

நான்.

உனது அன்பு
என் இதயத்தில்
நுழைந்தபோது
பூக்களும், கனிகளும், புள்ளினங்களுமாய்
என் வேடந்தாங்கல்.

என் நெஞ்சுதுளைத்து நீ
வெளியேறிய பின்
கட்டைகளும், சருகுகளும், எச்சங்களுமாய்
நான்.

காதல் அமரன்

காதல் மரம் அசைய..

கவிதைகள் வீசின
காற்றாய்.

காற்றாய்
காதல் போன பின்
கவிதை இருந்த இடம்
வெட்டவெளி.

எச்சரிக்கை


இருக்கட்டும்..

மீண்டும் எங்களுள்
இராஜ இராஜ சோழன்
பிறக்காமலா போய்விடுவான்..
சிங்களமே..!

'கவி'

நான் வாங்கிய டைரிகளில்
உனது அத்துனை அசைவுகளும்
பதிவாகியிருக்கின்றன
கவிதைகளாய்.

என் மூளையில்
அத்துனை செல்களும்
நிரம்பியிருக்கின்றன
உன்னைப் பற்றிய
கவிதைகளாய்.

எனது அத்துனைப் பேனாக்களிலும்
நிரப்பியிருக்கிறேன்
மைக்கு பதில் கவிதைகளாய்.

ஆனால் எனது 'கவி'தையே..!!

நீ என்னோடு வருவாயா
என் வாழ்க்கையாய்..!

விதி

காதல் விதை தான் நட்டேன்.
நான் நட்டியபோது
இலையுதிர் காலமாம்.

வசந்தம் வருமென்று காத்திருந்தேன்.

விதி விளையாடியது.

இலையுதிர் காலத்திற்குப்பிறகு
ஊழிக்காலம் தொடங்கியது.

என்னவளே..

எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்துவிட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.

கவனித்துக் கொள்.

அவை உன்
காற்செருப்புகள் அல்ல..

உன் கால்கள்.

கங்கை

அன்று
"கங்கையைக் கண்டதுண்டா?"
என்ற கேள்விக்கு
உன்னைக் காட்டினேன்.

இன்று
அதே கேள்விக்கு
என் கண்களைக் காட்டுகின்றேன்.

சலனம்

பெருங்கடலில் கூட
சிறு கல்லெறிந்தால்
சின்னச் சலனம்
தோன்றி மறையுமே!

என்
கடிதக்கற்கள்
உன் இதயக்கடலில்
சிறு சலனத்தைக்கூட
ஏற்படுத்தவில்லையா?

எனக்கு சாபமிட்டு பழக்கமில்லை.

உன் இதயம்
சஹாரா பாலைவனமாய்
இருப்பதைவிட
சலனமற்ற கடலாகவே இருக்கட்டும்.

சுருக்கம்

முழுப்பெயரை
சொல்லி அழைத்தால்
இருப்பதில்லை சுகம் என்று
செல்லமாக என் பெயரை
சுருக்கி அழைத்து
சுகம் கண்டாய்.

அந்தச் சுகம் போதாதென்று..

இன்று ஏன்
என் உயிரையும்
சுருக்கி
சுகம் காண்கிறாய் ?

பூமாலை

முல்லை மலர்கள்
பூத்த நாட்களிலெல்லாம்
பூச்சூடாத நீ..
நெஞ்சில்
நெருஞ்சி முள்
பூத்த காலத்தில்
ஓர் பூமாலை கேட்கிறாய்.

நினைப்பு

ஏழு பிறப்புகளில்
ஒரு பிறப்பிலாவது
உன்னோடு வாழ்ந்திடுவேன் என
மகிழ்ந்திருந்தேன்.

இறுதியில்தான் தெரிந்தது..
இது
ஏழாவது பிறப்பென்று.

அழைப்பு

தொலைபேசியில் அழைத்தாய் நீ
உனது திருமணத்திருவிழாவில்
என்னை
தொலைக்கப்போவதாய்ச் சொல்ல...

வெறி


செஞ்சோலைப் பூக்களைக் கருக்கியும்
பசியடங்கவில்லை
சிங்கள காட்டு தீ.

ஆளும்கட்சி

மந்திரி வீடு வரை
சாலை.

சாலை வரை மட்டுமே
மக்கள்.

பேருந்துப் பயணம்...


வளைந்து நெளிந்து
பின்னோக்கி ஓடுகின்றன

சாலைவிளிம்பும்
நினைவுகளும்..
எனது பேருந்துப் பயணத்தில்.

பிணம்

அட சுவாசமே...!

நீ நின்றபின் தான்

தெரிந்தது எனக்கு

எனது நிஜப்பெயர்.

காலுக்கு கீழே சில கல்லறைகள்.

கர்ப்பத்திலேயே தாயை உதைத்தாய்.
தோளில் சுமந்த தந்தையை உதைத்தாய்.
அறிவூட்டிய ஆசிரியரை உதைத்தாய்.
அனுபவம் பெறுவதாய் நண்பர்களை உதைத்தாய்.
ஆளுவதாய் நினைத்து மனைவியை உதைத்தாய்.
உனக்கென சொத்து சேர்த்து உறவுகளை உதைத்தாய்.
வாழ்க்கை உன்னை உதைக்கும் முன்
சற்றே பார் உன் கால்களை..
ரத்தச் சகதியில் நின்றிருப்பாய்.

காத்திருப்பு

வெறும் வார்த்தைகளை மட்டுமே
தெரிந்து வைத்திருந்த என்னை
வாக்கியங்கள் பேசவைத்தாய் அன்று.
கவிதைகள் எழுதவைத்தாய் இன்று.
நாளை..!?

ருத்ரா..!!

நம்மை பிரித்ததில்
எமனுக்குத் தோல்விதான்
பின்னே என்ன?
உன் தோழமையில்
மறந்திருந்த எங்களை
என்றும் நினைக்கவைத்தான்..
உன் மரணத்தில்.

ஏன்?


எனக்கு
சுவாசிக்கக் கற்றுக்கொடுத்துவிட்டு
நீ ஏன்
உன் மூச்சை நிறுத்திக்கொண்டாய் ?

நண்பனே..

இத்தனை சுயநலக்காரனா நான்
உன்னைப்பிரிந்து
இன்னும் பூமியில்!

சுகம்

நாள்காட்டி இதழ்களை கிழிப்பதில்
எனக்கு ஒரு சுகம்தான்..

ஆம்
உன்னை அடைய
வெகுநாட்களில்லை..

உடலால் இறந்துபோன
என் நண்பா!

சுனாமி

கடலே
வீடு தேடி வந்தது.
சுனாமி.

அமர்வு


கனமற்ற கடிதம்
படித்ததும்
கனத்தது நெஞ்சம்.
காரணம்...
கடிதத்தில்
நீ.