நானும்... ஏனையோரும்...

எல்லோரும்
காதலாலும் காதலுக்குபின்னும்
கவிதையெழுதிக் கொண்டிருக்க...
நானோ
ஒரு கவிதையை அல்லவா
காதலித்துக்கொண்டிருக்கிறேன்.

தாலாட்டு-2

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.
கார்த்திகை பாலகனே நீயுறங்கு... ஆரோ  ஆரிராரோ...
மாதவனோ ஆதவனோ நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

மாயவன் மருகனோ, சதுர்த்தி நாதனோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
உமையவள் மடியுதித்த உத்தமனோ...
உத்தமன் புத்திரனே நீயுறங்கு கண்மணியே...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

முத்தமிழ் வித்தகனோ மூவேந்தர் குலக்கொழுந்தோ ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
கருணை நாதனோ, கருணா மூர்த்தியோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
அருவுருவான அண்ணலோ நீ நித்திலமே கண்ணுறங்கு...
சங்கரனே சண்முகனே ஐங்கரனே மாயவனே
சக்தியுமையாய் நின்றாய் யாவுமானாய் நீ ஆராரோ ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


உன்னைத் தொட்டிலிட்டு தாலாட்டு பாடுகிறேன்
கண்ணுறங்கு கண்மணியே..
தத்துவப் பேரூற்றே, தாயுமான தயாளனே,
சந்திர சூரியனும் அக்கினியும் நேத்திரமாய்
உலகினுக்கு ஒளிதந்த உத்தமனே நீயுறங்கு.. ஆராரோ ஆரிரரோ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


ஓமெனும் மந்திரத்து உள்விளங்கு விழுப்பொருளே நீயுறங்கு..
சங்கப்பலகை தாலாட்டும் செந்தமிழ்ப்பாலோ..
சங்கத்தமிழ் தந்த சிங்கத் தமிழனே நீயுறங்கு...
சங்கப் பலகை உந்தன் தாலாட்டு தொட்டிலய்யா..
செந்நாப் புலவருனை செந்தமிழ்ப் பாட்டிசைக்க
நான்வேதம் தான்முழங்க கண்ணே உறங்கய்யா... ஆராரோ ஆரிரரோ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


அன்புக் கடலுதித்த் ஆரா அமுதே நீ
அரியும் நான்முகனும் அடிமுடிகாணாது அலைந்துசோர
சோதிவடிவாய்நின்ற அண்ணாமலையானே ஆராரோ... ஆரிரரோ..
செம்பவளத் தொட்டிலிலே சீராளா நீயுறங்கு...
பச்சைவண்ணத் தொட்டிலிலே பண்பாளா நீயுறங்கு...
நித்திலமே தத்துவமே நிமலனே நீயுறங்கு...
மூத்தவனே முத்தாய் வந்தவனே...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

தாலாட்டு-1

ஆராரோ ஆராரோ கண்ணே நீ ஆரீரரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழுக கண்ணே உனை
அடித்தவரை சொல்லி அழு
பஞ்சு மெத்தை பட்டுமெத்தை கண்ணே உனக்குப்
பரமசிவன் கொடுத்தமெத்தை
அக்கா கொடுத்த மெத்தை கண்ணே
உனக்கு அழகான தங்கமெத்தை
மேலு வலிக்காம கண்ணே நீ
மெத்தையிலே படுத்துறங்கு
மானே மருக்கொழுந்தே கண்ணே நீ
மலர்விரிந்த மல்லியப்பூ
கரும்புசிலையானோ கண்ணே நீ
கந்தனுக்கே நாயகனோ?
சீதைக்கு அதிபதியோ கண்ணே நீ
சிங்கார ராமபிரான்தானோ?
வட்டக்கலசலத்திலே கண்ணே நீ
வாய் நிரம்பப்பால் குடிச்சி
வாகான தொட்டிலிலே கண்ணே நீ
வச்சிரம்போல் தூங்கிடய்யா...

உன் அன்பு நானறிந்த வகையில்...

தாய்பறவையின் பாசம்.
குஞ்சுபொறிக்க அமரும் வைராக்கியமும் பொறுமையும்.
மழலையின் குறிப்பறிந்து மார்கொடுக்கும் தாய்மை.
என்னை உன்னில் காட்டிய கண்ணன்.
என்னிலுள்ள அத்துனை மிருகங்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கானகம்.
மனம் வருந்திய போது மடங்கி அருகமர்ந்து தலை தடவும் தோழமை.
இன்னலுற்ற போது இதயப்பூர்வமாய் கொடுக்கும் இதம்.
என் சுண்டுவிரல் பற்றி உறுதி சொல்லும் உறுதுணை.
எனது சினத்திலும் சிறிதும் மாறாத உன் அமைதி.
குறும்புகளில் எல்லைமீறும் போதும் சிறுபார்வையால் கட்டிப்போடும் கண்ணியம்.
பேசத்தெரியாமல் தடுமாறிய போதும் பேசவைத்த அரிச்சுவடி.
அதிராத இடிமின்னல்.
இடித்துரைக்கும் ஏமரா மகராணி.
உடுக்கை இழந்தவன் கை.
மடிதற்று முந்துறும் தெய்வம்.
ஊடல் காதலின் கௌரவம் என்ற காதலி நீ.
கூடல் அகவை தாண்டிய பின்னரும் பாடல் உண்டென காதல் காட்டிய கண்மணி.
இன்னுமிருக்கிறது சொல்ல...
இத்துடன் நிறுத்தி வருகிறேன் உன்னருகில்,
இதுவரை நான் எங்கேயும் காணாத காதலை உன்னிடம் கற்க.

நீ யார்?

நான் சிரித்தபோது சிரித்து,
அழுதபோது அழுது,
அப்படியே செய்ய நீ வெறும் காதலியல்ல..

என்னை வழி நடத்திச்செல்லும்
நேர்மறை எண்ணம் நீ
நினைவுகொள்.

காதல் கடிதம்

காதல் கடிதம்
எழுதவேண்டுமென்றுதான்
அமருகிறேன்
ஒவ்வொரு முறையும்.
கவிதைகளாகவே தொடங்குகின்றன
வார்த்தைகள்.

சறுக்கல்

மிக மிக சாதூர்யமாய் தான்
வைக்கிறேன் ஒவ்வொரு அடியும்
உன் இதழ் படிகளில்.

ஆனாலும் வழுக்கி விழுகிறேன்
விழிப்பார்வையால் உன்
இதயக்குளத்திற்குள்.

என்னை நீ...

உன்னைக் காதலியாய் மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்...
நீயோ என்னைக்
கணவனாக்கி
தகப்பானாகவும் ஆக்கிவிட்டாய்.

காதல் தோல்வி

அடிக்கடி போட்டிவரும்
நமக்குள்
யார் அதிகமாய் காதலிப்பவர் என்று...
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன் நான் உன்னிடம்
உனக்கான காதலோடு.

முதலும் வட்டியுமாய்...

உனக்கான கவிதைகளைக்
கூட்டு வட்டியாய்
சேமித்து கொண்டேயிருக்கிறேன் எனக்குள்.

அத்தனையும் சொல்வேன் உன்னிடம்
முதலாய் உன்னை தந்தால் மட்டும்..
அந்தச் செல்லச் சிணுங்கள்களோடு.

நினைவிழைகள்...

வீட்டில் ஒட்டடை கூட அடிக்கவில்லை..

அதன் ஒவ்வொரு இழையிலும்
பிணைத்து வைத்திருக்கிறேன்
உன் நினைவுகளை...

நிலவு நீ.. கதிரும் நீ.. கவிதை நீ...

தோழியாய் இருந்த வரை
சூரியனாய் சுட்டெரித்துக்கொண்டிருந்தாய்
பார்வையால்.

காதலித்துப் பார்த்ததால் தான்
தெரிகிறது...
குளிர்ந்த நிலவு நீயென்று...
சுட்டெரித்தது உன் பெண்மைதான்.

காதல் கடிகாரம்

சின்னமுள் நீ...
பெரியமுள் நான்..
நம் காதலை நிமிடம்தோறும் ரசிக்க
பிறந்தான் நம் மைந்தன்..
நிமிடமுள்ளாக.

பிறகென்ன..!!

காலில் அடிபட்டபோது
கலங்கின கண்கள்.
கண்ணத்தில் அடித்தபோது
கைகள் ஏன் நீளவில்லை???

ஒற்றுமையில் வேற்றுமை

உங்களுக்கும்
எனக்கும்
உள்ள வேற்றுமையைத் தவிர
வேரெந்த ஒற்றுமையும் இல்லை...
நமக்குள்.

பிறகு..

பெருமழைக்குப்பின்
நைந்து போன
கந்தல் துணியாய்
சாலைகளும்..
அவள் திருமணப் பத்திரிக்கை
கண்ட நானும்.

உருண்டைகள்...

வயிற்றுக்கும்
தொண்டைக்கும்
உருவமில்லாதொரு
உருண்டை உருள
கடற்கரையில்
நின்றிருந்தான் அவன்.

தொண்டைக்கும்
வயிற்றுக்கும்
உருண்டை உருள
"ஒரெயொரு சுண்டல் வாங்கிகோங்கண்ணே" என்றான் சிறுவன்.

பேச்சு

நிறைய பேசிவிட்டோம்
அதைச்செய்வோம்
இதைச்செய்வோம் என்று..

பேசியதைத் தவிர
வேறெதுவும் செய்யவில்லை
இதுவரை.

TN STATE BOOKS ONLINE

Dear All..... Pls pass on this information to your friends / neighbors... whose children are studying in the Stateboards.

I think sometimes we are indirectly helping to someone like this.
Now the TN State board books are online in PDF and downloadable.
From Std 1 to Std 12. All subjects... Any GOOD heart person can print this material & handover to some Poor people.
http://www.textbooksonline.tn.nic.in/