நிதர்சனங்கள்

* உடம்பெல்லாம்
வியர்வை நாற்றம்
பூக்கடைக்காரன்.

* வாடிப்போய்
வீடு சேர்ந்தாள்
கீரைக்காரி.

* சாலையோர
துணிக்கடைக்காரன்
ஒற்றை வேட்டியுடன்.

முரண்

சண்டையிட்டுக் கொண்டோம்..
நமக்குள்
இனி
சண்டை வரக்கூடாதென்று.

எழுந்துவா இளைய ஞாயிறே!

இன்று வெட்டிக்கொள்ளும்
வெவ்வேறு சாதிக்காரர்களும்
அன்று மனிதர்களாய் இருந்தபோது
தோளோடு தோள்கொடுத்து
நிமிர்ந்து நின்ற
'மனிதத்தேரை'
மகிழ்ச்சியோடு இழுத்தவர்கள் தான்.
தொழில்கள் காரணமாய்
தென்றலாய்ப் புகுந்த சாதி..
மெது மெதுவே முறுகேறி
மென்னி முறிக்கும்புயலாய் இன்று.

அன்றைய அரிவாள் கதிரறுக்க
இன்றோ கழுத்தறுக்க.

மட்டம் தட்டிப் பேசுவதும்
இருந்தது அன்று வேடிக்கையாய்,
வட்டம் கட்டிப் பேசுவர்
இன்று வெறித்தனமாய்.

அத்தணையும்
பணத்திமிர்,
சாதி வெறி.

வார்த்தைகளில் பூத்தூவிய
வசந்தகாலங்கள்
கோடையானது.
குருதி கொப்பளிக்கும்
இன்றுஅக்னி நட்சத்திரம்.

மனதிற்குள் வெறுப்பு உண்டு
சாதியை வெட்டி எறிய
ஒவ்வொருவருக்கும்,

பழமைகள் அணைபோடுவதால்
தேங்கின எண்ணங்கள்.

அழுத்தம் அதிகமாக்கி
அணையை உடைத்து
எண்ண ஞாயிறே!
எழுந்துவா இச்சிறுமை கண்டு.

இனி பகல் தான்
என்றும் எப்போதும்..
இச்சாதிவெறியும் சாதியும்
ஒழிந்தபின் தான்
காலை, மாலைகள் என
உறுதிகொண்டு
எழுந்துவா இளைய ஞாயிறே!
-------------------------------------------------

15.9.95 அன்று கோவை வானொலியில்
ஒளிபரப்பான எனது கவிதை.

தூண்டில்

புழுவிற்காய்
மீனும்..

மீனுக்காய்
நானும்.

நண்பா!!

இருந்த போதும்
இறந்த போதும்
நிரூபிக்க தவறவில்லை
நீ
இனியவனென்று.
-----------------------------------
கரும்பு சுமை ஏற்றிவரும் லாரி மேலே கவிழ்ந்த விபத்தொன்றில் அகால மரணமடைந்த என் உயிர் நண்பனுக்காக.

காதலித்துப்பார்!


முதல் மிஸ்டு காலும் அவள்தான்
முதல் டயல்டு காலும் அவள்தான்.

நன்றி: நிலவுநண்பன்.

தொடர்பு

விதைகளை
நட்டுச்சென்றாய்
பூமி பூப்பூத்தது.

மலர்களை
கொய்து சென்றாய்
வானம்
கண்ணீர் விட்டது.

நான்.

உனது அன்பு
என் இதயத்தில்
நுழைந்தபோது
பூக்களும், கனிகளும், புள்ளினங்களுமாய்
என் வேடந்தாங்கல்.

என் நெஞ்சுதுளைத்து நீ
வெளியேறிய பின்
கட்டைகளும், சருகுகளும், எச்சங்களுமாய்
நான்.

காதல் அமரன்

காதல் மரம் அசைய..

கவிதைகள் வீசின
காற்றாய்.

காற்றாய்
காதல் போன பின்
கவிதை இருந்த இடம்
வெட்டவெளி.

எச்சரிக்கை


இருக்கட்டும்..

மீண்டும் எங்களுள்
இராஜ இராஜ சோழன்
பிறக்காமலா போய்விடுவான்..
சிங்களமே..!

'கவி'

நான் வாங்கிய டைரிகளில்
உனது அத்துனை அசைவுகளும்
பதிவாகியிருக்கின்றன
கவிதைகளாய்.

என் மூளையில்
அத்துனை செல்களும்
நிரம்பியிருக்கின்றன
உன்னைப் பற்றிய
கவிதைகளாய்.

எனது அத்துனைப் பேனாக்களிலும்
நிரப்பியிருக்கிறேன்
மைக்கு பதில் கவிதைகளாய்.

ஆனால் எனது 'கவி'தையே..!!

நீ என்னோடு வருவாயா
என் வாழ்க்கையாய்..!

விதி

காதல் விதை தான் நட்டேன்.
நான் நட்டியபோது
இலையுதிர் காலமாம்.

வசந்தம் வருமென்று காத்திருந்தேன்.

விதி விளையாடியது.

இலையுதிர் காலத்திற்குப்பிறகு
ஊழிக்காலம் தொடங்கியது.

என்னவளே..

எனது ஞாபகங்களை
கழற்றி எறிந்துவிட்டு
வாழ்க்கைப் பாதையில்
நீ நடக்க முடியாது.

கவனித்துக் கொள்.

அவை உன்
காற்செருப்புகள் அல்ல..

உன் கால்கள்.

கங்கை

அன்று
"கங்கையைக் கண்டதுண்டா?"
என்ற கேள்விக்கு
உன்னைக் காட்டினேன்.

இன்று
அதே கேள்விக்கு
என் கண்களைக் காட்டுகின்றேன்.

சலனம்

பெருங்கடலில் கூட
சிறு கல்லெறிந்தால்
சின்னச் சலனம்
தோன்றி மறையுமே!

என்
கடிதக்கற்கள்
உன் இதயக்கடலில்
சிறு சலனத்தைக்கூட
ஏற்படுத்தவில்லையா?

எனக்கு சாபமிட்டு பழக்கமில்லை.

உன் இதயம்
சஹாரா பாலைவனமாய்
இருப்பதைவிட
சலனமற்ற கடலாகவே இருக்கட்டும்.

சுருக்கம்

முழுப்பெயரை
சொல்லி அழைத்தால்
இருப்பதில்லை சுகம் என்று
செல்லமாக என் பெயரை
சுருக்கி அழைத்து
சுகம் கண்டாய்.

அந்தச் சுகம் போதாதென்று..

இன்று ஏன்
என் உயிரையும்
சுருக்கி
சுகம் காண்கிறாய் ?

பூமாலை

முல்லை மலர்கள்
பூத்த நாட்களிலெல்லாம்
பூச்சூடாத நீ..
நெஞ்சில்
நெருஞ்சி முள்
பூத்த காலத்தில்
ஓர் பூமாலை கேட்கிறாய்.

நினைப்பு

ஏழு பிறப்புகளில்
ஒரு பிறப்பிலாவது
உன்னோடு வாழ்ந்திடுவேன் என
மகிழ்ந்திருந்தேன்.

இறுதியில்தான் தெரிந்தது..
இது
ஏழாவது பிறப்பென்று.

அழைப்பு

தொலைபேசியில் அழைத்தாய் நீ
உனது திருமணத்திருவிழாவில்
என்னை
தொலைக்கப்போவதாய்ச் சொல்ல...

வெறி


செஞ்சோலைப் பூக்களைக் கருக்கியும்
பசியடங்கவில்லை
சிங்கள காட்டு தீ.

ஆளும்கட்சி

மந்திரி வீடு வரை
சாலை.

சாலை வரை மட்டுமே
மக்கள்.

பேருந்துப் பயணம்...


வளைந்து நெளிந்து
பின்னோக்கி ஓடுகின்றன

சாலைவிளிம்பும்
நினைவுகளும்..
எனது பேருந்துப் பயணத்தில்.

பிணம்

அட சுவாசமே...!

நீ நின்றபின் தான்

தெரிந்தது எனக்கு

எனது நிஜப்பெயர்.

காலுக்கு கீழே சில கல்லறைகள்.

கர்ப்பத்திலேயே தாயை உதைத்தாய்.
தோளில் சுமந்த தந்தையை உதைத்தாய்.
அறிவூட்டிய ஆசிரியரை உதைத்தாய்.
அனுபவம் பெறுவதாய் நண்பர்களை உதைத்தாய்.
ஆளுவதாய் நினைத்து மனைவியை உதைத்தாய்.
உனக்கென சொத்து சேர்த்து உறவுகளை உதைத்தாய்.
வாழ்க்கை உன்னை உதைக்கும் முன்
சற்றே பார் உன் கால்களை..
ரத்தச் சகதியில் நின்றிருப்பாய்.

காத்திருப்பு

வெறும் வார்த்தைகளை மட்டுமே
தெரிந்து வைத்திருந்த என்னை
வாக்கியங்கள் பேசவைத்தாய் அன்று.
கவிதைகள் எழுதவைத்தாய் இன்று.
நாளை..!?

ருத்ரா..!!

நம்மை பிரித்ததில்
எமனுக்குத் தோல்விதான்
பின்னே என்ன?
உன் தோழமையில்
மறந்திருந்த எங்களை
என்றும் நினைக்கவைத்தான்..
உன் மரணத்தில்.

ஏன்?


எனக்கு
சுவாசிக்கக் கற்றுக்கொடுத்துவிட்டு
நீ ஏன்
உன் மூச்சை நிறுத்திக்கொண்டாய் ?

நண்பனே..

இத்தனை சுயநலக்காரனா நான்
உன்னைப்பிரிந்து
இன்னும் பூமியில்!

சுகம்

நாள்காட்டி இதழ்களை கிழிப்பதில்
எனக்கு ஒரு சுகம்தான்..

ஆம்
உன்னை அடைய
வெகுநாட்களில்லை..

உடலால் இறந்துபோன
என் நண்பா!

சுனாமி

கடலே
வீடு தேடி வந்தது.
சுனாமி.

அமர்வு


கனமற்ற கடிதம்
படித்ததும்
கனத்தது நெஞ்சம்.
காரணம்...
கடிதத்தில்
நீ.

தென்றலே

அசையாத தென்னங்கீற்று.
நீ
அந்தப்பக்கம்
செல்வதில்லைபோலும்.

கவிதை !


கவிதையெழுத
கடலுக்குள் சென்றேன்,
வலையில் சிக்காத மீன்களாய்
சொற்கள்.

என் காதலே

நீ நடக்காத மலர்ச்சோலையை விட
நீ நடந்த வெயில் வீசும்
மணற்பாலையில் நடப்பதுதான் சுகமாக இருக்கிறது.
நீ கடிகாத கரும்பைவிட
நீ கடித்த வேப்பங்காய் தானே இனிக்கிறது..!

ஏக்கம்

நீ பார்த்ததால் என் நெஞ்சில் முள் தைத்தது.
முள்ளை முள்ளால் தானே எடுக்கவேண்டும்...
எங்கே இன்னோருமுறை பார்.

-கவிப்ரியன்