தாலாட்டு-2

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.
கார்த்திகை பாலகனே நீயுறங்கு... ஆரோ  ஆரிராரோ...
மாதவனோ ஆதவனோ நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

மாயவன் மருகனோ, சதுர்த்தி நாதனோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
உமையவள் மடியுதித்த உத்தமனோ...
உத்தமன் புத்திரனே நீயுறங்கு கண்மணியே...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

முத்தமிழ் வித்தகனோ மூவேந்தர் குலக்கொழுந்தோ ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
கருணை நாதனோ, கருணா மூர்த்தியோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
அருவுருவான அண்ணலோ நீ நித்திலமே கண்ணுறங்கு...
சங்கரனே சண்முகனே ஐங்கரனே மாயவனே
சக்தியுமையாய் நின்றாய் யாவுமானாய் நீ ஆராரோ ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


உன்னைத் தொட்டிலிட்டு தாலாட்டு பாடுகிறேன்
கண்ணுறங்கு கண்மணியே..
தத்துவப் பேரூற்றே, தாயுமான தயாளனே,
சந்திர சூரியனும் அக்கினியும் நேத்திரமாய்
உலகினுக்கு ஒளிதந்த உத்தமனே நீயுறங்கு.. ஆராரோ ஆரிரரோ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


ஓமெனும் மந்திரத்து உள்விளங்கு விழுப்பொருளே நீயுறங்கு..
சங்கப்பலகை தாலாட்டும் செந்தமிழ்ப்பாலோ..
சங்கத்தமிழ் தந்த சிங்கத் தமிழனே நீயுறங்கு...
சங்கப் பலகை உந்தன் தாலாட்டு தொட்டிலய்யா..
செந்நாப் புலவருனை செந்தமிழ்ப் பாட்டிசைக்க
நான்வேதம் தான்முழங்க கண்ணே உறங்கய்யா... ஆராரோ ஆரிரரோ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


அன்புக் கடலுதித்த் ஆரா அமுதே நீ
அரியும் நான்முகனும் அடிமுடிகாணாது அலைந்துசோர
சோதிவடிவாய்நின்ற அண்ணாமலையானே ஆராரோ... ஆரிரரோ..
செம்பவளத் தொட்டிலிலே சீராளா நீயுறங்கு...
பச்சைவண்ணத் தொட்டிலிலே பண்பாளா நீயுறங்கு...
நித்திலமே தத்துவமே நிமலனே நீயுறங்கு...
மூத்தவனே முத்தாய் வந்தவனே...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.