நன்றி: தபு சங்கர்.
உன்னை முதலில் சும்மாதான் பார்த்தேன்! அப்புறம் சும்மா சும்மா பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கிறேன் என்பதற்காக நீயும் பார்க்க ஆரம்பித்த பிறகு, உன்னைக் காதலித்தால் என்னவென்று தோன்ற ஆரம்பித்தது. ஆனால், உன்னைக் காதலிக்கலாமா வேண்டாமா என்பதை என் அப்பாவைக் கேட்டுத்தான் முடிவெடுக்க வேண்டும். ஏன் என்றால் என் அப்பா என் மிகச் சிறந்த நண்பர்.
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் 'அப்பா... நான் காதலிக்கலாம்னு இருக்கேன்ப்பா' என்றேன். 'அய்யோ பாவம்!' என்றார் அப்பா. 'ஏம்ப்பா..?' டேய்... நானும் இப்பிடித் தான் வெவரம் தெரியாம, உங்கம்மாவைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். ஆனா, இவ பண்ற இம்சை இருக்கே... தாங்க முடியலை. சரி, காதலிச்சுச் தொலைச்சுட்டமே... வேற என்ன பண்றதுனு வாழ்ந்துட்டிருக்கேன். இதுவே எங்க அம்மா & அப்பா பாத்து நடத்தி வெச்ச கல்யாணம்னு வெச்சுக்க... 'சரிதான் போடீ!'னு எப்பவோ இவளைப் பிறந்த வீட்டுக்கு அனுப்பியிருப்பேன்... இதுக்குமேல 'காதலிக்கலாமா... வேண்டாமா?'னு நீயே யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடுத்துக்க!' என்றார் சிரித்தபடியே.
சாப்பாடு போட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அப்பாவின் தலையில் செல்லமாகக் குட்டிவிட்டு 'அப்படி என்ன இம்சை பண்றேன் உங்களை?' என்று சண்டைபோட ஆரம்பித்தார்.
அந்த அழகான சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்போதே முடிவு செய்துவிட்டேன்... உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்வதென்று!