காலங்களில் நீ..

நீ

இரக்கப்பட்டால் கார்காலம்,

பெருமூச்செறிந்தால் வேனிற்காலம்,

மகிழ்ந்தால் வசந்தகாலம்,

சிரித்தால் இலையுதிர்காலம்.

நானும்... ஏனையோரும்...

எல்லோரும்
காதலாலும் காதலுக்குபின்னும்
கவிதையெழுதிக் கொண்டிருக்க...
நானோ
ஒரு கவிதையை அல்லவா
காதலித்துக்கொண்டிருக்கிறேன்.

தாலாட்டு-2

கண்ணே கண்மணியே கண்ணுறங்கு கண்ணுறங்கு
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.
கார்த்திகை பாலகனே நீயுறங்கு... ஆரோ  ஆரிராரோ...
மாதவனோ ஆதவனோ நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...

மாயவன் மருகனோ, சதுர்த்தி நாதனோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
உமையவள் மடியுதித்த உத்தமனோ...
உத்தமன் புத்திரனே நீயுறங்கு கண்மணியே...

கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

முத்தமிழ் வித்தகனோ மூவேந்தர் குலக்கொழுந்தோ ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
கருணை நாதனோ, கருணா மூர்த்தியோ...நீ யாரோ யாரிவரோ... ஆரோ ஆரிராரோ...
அருவுருவான அண்ணலோ நீ நித்திலமே கண்ணுறங்கு...
சங்கரனே சண்முகனே ஐங்கரனே மாயவனே
சக்தியுமையாய் நின்றாய் யாவுமானாய் நீ ஆராரோ ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


உன்னைத் தொட்டிலிட்டு தாலாட்டு பாடுகிறேன்
கண்ணுறங்கு கண்மணியே..
தத்துவப் பேரூற்றே, தாயுமான தயாளனே,
சந்திர சூரியனும் அக்கினியும் நேத்திரமாய்
உலகினுக்கு ஒளிதந்த உத்தமனே நீயுறங்கு.. ஆராரோ ஆரிரரோ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


ஓமெனும் மந்திரத்து உள்விளங்கு விழுப்பொருளே நீயுறங்கு..
சங்கப்பலகை தாலாட்டும் செந்தமிழ்ப்பாலோ..
சங்கத்தமிழ் தந்த சிங்கத் தமிழனே நீயுறங்கு...
சங்கப் பலகை உந்தன் தாலாட்டு தொட்டிலய்யா..
செந்நாப் புலவருனை செந்தமிழ்ப் பாட்டிசைக்க
நான்வேதம் தான்முழங்க கண்ணே உறங்கய்யா... ஆராரோ ஆரிரரோ...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.


அன்புக் கடலுதித்த் ஆரா அமுதே நீ
அரியும் நான்முகனும் அடிமுடிகாணாது அலைந்துசோர
சோதிவடிவாய்நின்ற அண்ணாமலையானே ஆராரோ... ஆரிரரோ..
செம்பவளத் தொட்டிலிலே சீராளா நீயுறங்கு...
பச்சைவண்ணத் தொட்டிலிலே பண்பாளா நீயுறங்கு...
நித்திலமே தத்துவமே நிமலனே நீயுறங்கு...
மூத்தவனே முத்தாய் வந்தவனே...
கவிதாபுத்திரனே மித்ரனே கண்ணுறங்கு.

தாலாட்டு-1

ஆராரோ ஆராரோ கண்ணே நீ ஆரீரரோ ஆராரோ
ஆரடித்தார் நீ அழுக கண்ணே உனை
அடித்தவரை சொல்லி அழு
பஞ்சு மெத்தை பட்டுமெத்தை கண்ணே உனக்குப்
பரமசிவன் கொடுத்தமெத்தை
அக்கா கொடுத்த மெத்தை கண்ணே
உனக்கு அழகான தங்கமெத்தை
மேலு வலிக்காம கண்ணே நீ
மெத்தையிலே படுத்துறங்கு
மானே மருக்கொழுந்தே கண்ணே நீ
மலர்விரிந்த மல்லியப்பூ
கரும்புசிலையானோ கண்ணே நீ
கந்தனுக்கே நாயகனோ?
சீதைக்கு அதிபதியோ கண்ணே நீ
சிங்கார ராமபிரான்தானோ?
வட்டக்கலசலத்திலே கண்ணே நீ
வாய் நிரம்பப்பால் குடிச்சி
வாகான தொட்டிலிலே கண்ணே நீ
வச்சிரம்போல் தூங்கிடய்யா...

உன் அன்பு நானறிந்த வகையில்...

தாய்பறவையின் பாசம்.
குஞ்சுபொறிக்க அமரும் வைராக்கியமும் பொறுமையும்.
மழலையின் குறிப்பறிந்து மார்கொடுக்கும் தாய்மை.
என்னை உன்னில் காட்டிய கண்ணன்.
என்னிலுள்ள அத்துனை மிருகங்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கானகம்.
மனம் வருந்திய போது மடங்கி அருகமர்ந்து தலை தடவும் தோழமை.
இன்னலுற்ற போது இதயப்பூர்வமாய் கொடுக்கும் இதம்.
என் சுண்டுவிரல் பற்றி உறுதி சொல்லும் உறுதுணை.
எனது சினத்திலும் சிறிதும் மாறாத உன் அமைதி.
குறும்புகளில் எல்லைமீறும் போதும் சிறுபார்வையால் கட்டிப்போடும் கண்ணியம்.
பேசத்தெரியாமல் தடுமாறிய போதும் பேசவைத்த அரிச்சுவடி.
அதிராத இடிமின்னல்.
இடித்துரைக்கும் ஏமரா மகராணி.
உடுக்கை இழந்தவன் கை.
மடிதற்று முந்துறும் தெய்வம்.
ஊடல் காதலின் கௌரவம் என்ற காதலி நீ.
கூடல் அகவை தாண்டிய பின்னரும் பாடல் உண்டென காதல் காட்டிய கண்மணி.
இன்னுமிருக்கிறது சொல்ல...
இத்துடன் நிறுத்தி வருகிறேன் உன்னருகில்,
இதுவரை நான் எங்கேயும் காணாத காதலை உன்னிடம் கற்க.