கவிதை தெரிந்தவன்

எல்லாம் தெரிந்தது போல
கவிதை எழுத தொடங்கிவிட்டேன்.

கவிதை எழுத 
உன்னைத் தவிர வேறு ஏதேனும் தெரிந்திருக்க வேண்டுமா என்ன..?

காத்திருப்பு

சோ....வென மழை..

கடைசி துளிக்காய்
சிறகுகள் கோதி 
பறக்கக் காத்திருக்கிறான் கணவன்...

இரையோடு வருவானென்று 
முட்டை மேல் அமர்ந்திருக்கிறாள் 
மனைவி.

காதல் கருந்துளை

பேரன்பின் வடிவானவள்!
கருந்துளையின் கணக்காய் 
ஈர்த்துக் கொண்டாள் 
என் காதலை. 

வெறும் கண்களை மூடிக் 
கிடக்கின்றேன் நான் 
கனவுகளின்றி. 

மௌனம்

நான் ஏன் 
அதிகம் பேசுவதில்லை என்று கேட்கிறார்கள்..!
மௌனத்தில் சத்தமாக 
நாம் பேசிக்கொள்வது 
இவர்களுக்கு கேட்பதில்லை போலும்..!

பேரன்பின் அமைதி

"கவலைப்படாதீங்க, 
நான் நல்லா இருக்கேன் "
என்ற ஒற்றை வாசகம் போதும் 
காதலுக்கும், தகப்பனுக்கும், 
பேரன்பின் அமைதியை அளிக்க. 

தொலைந்து போனவன்

காணாமல் போயிருந்தபோது
நீதான் கண்டுபிடித்தாய் 
உனக்குள் இருந்த என்னை.

ம்

காதலாக 
ஒரு "ம்..."-ல்
முடிக்கிறாய் ஊடலை.
தொடங்குகிறது 
என் கவிதை.

கவிதைச்செடி

சொற்களாய் 
பூத்தபோது தான் தெரிந்தது 
என்னை 
அறியாமலே 
வளர்த்திருக்கிறேன் 
கவிதைச் செடிகளை