Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

யாரோ

நீயும் நானும் அதுவும்

அவள் அப்படித்தான்

தேடல்

கவிதை தெரிந்தவன்

எல்லாம் தெரிந்தது போல
கவிதை எழுத தொடங்கிவிட்டேன்.

கவிதை எழுத 
உன்னைத் தவிர வேறு ஏதேனும் தெரிந்திருக்க வேண்டுமா என்ன..?

காத்திருப்பு

சோ....வென மழை..

கடைசி துளிக்காய்
சிறகுகள் கோதி 
பறக்கக் காத்திருக்கிறான் கணவன்...

இரையோடு வருவானென்று 
முட்டை மேல் அமர்ந்திருக்கிறாள் 
மனைவி.

காதல் கருந்துளை

பேரன்பின் வடிவானவள்!
கருந்துளையின் கணக்காய் 
ஈர்த்துக் கொண்டாள் 
என் காதலை. 

வெறும் கண்களை மூடிக் 
கிடக்கின்றேன் நான் 
கனவுகளின்றி. 

மௌனம்

நான் ஏன் 
அதிகம் பேசுவதில்லை என்று கேட்கிறார்கள்..!
மௌனத்தில் சத்தமாக 
நாம் பேசிக்கொள்வது 
இவர்களுக்கு கேட்பதில்லை போலும்..!

பேரன்பின் அமைதி

"கவலைப்படாதீங்க, 
நான் நல்லா இருக்கேன் "
என்ற ஒற்றை வாசகம் போதும் 
காதலுக்கும், தகப்பனுக்கும், 
பேரன்பின் அமைதியை அளிக்க. 

ம்

காதலாக 
ஒரு "ம்..."-ல்
முடிக்கிறாய் ஊடலை.
தொடங்குகிறது 
என் கவிதை.

கவிதைச்செடி

சொற்களாய் 
பூத்தபோது தான் தெரிந்தது 
என்னை 
அறியாமலே 
வளர்த்திருக்கிறேன் 
கவிதைச் செடிகளை 

கவிதை எழுதினேனா!!

உன்னை
நினைத்துப் பார்த்து
கவிதைகள் எழுத..
நான்
கவிதை எழுதவில்லை...
உன்னையே தான்
எழுதுகிறேன்.

நானும்... ஏனையோரும்...

எல்லோரும்
காதலாலும் காதலுக்குபின்னும்
கவிதையெழுதிக் கொண்டிருக்க...
நானோ
ஒரு கவிதையை அல்லவா
காதலித்துக்கொண்டிருக்கிறேன்.

உன் அன்பு நானறிந்த வகையில்...

தாய்பறவையின் பாசம்.
குஞ்சுபொறிக்க அமரும் வைராக்கியமும் பொறுமையும்.
மழலையின் குறிப்பறிந்து மார்கொடுக்கும் தாய்மை.
என்னை உன்னில் காட்டிய கண்ணன்.
என்னிலுள்ள அத்துனை மிருகங்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கானகம்.
மனம் வருந்திய போது மடங்கி அருகமர்ந்து தலை தடவும் தோழமை.
இன்னலுற்ற போது இதயப்பூர்வமாய் கொடுக்கும் இதம்.
என் சுண்டுவிரல் பற்றி உறுதி சொல்லும் உறுதுணை.
எனது சினத்திலும் சிறிதும் மாறாத உன் அமைதி.
குறும்புகளில் எல்லைமீறும் போதும் சிறுபார்வையால் கட்டிப்போடும் கண்ணியம்.
பேசத்தெரியாமல் தடுமாறிய போதும் பேசவைத்த அரிச்சுவடி.
அதிராத இடிமின்னல்.
இடித்துரைக்கும் ஏமரா மகராணி.
உடுக்கை இழந்தவன் கை.
மடிதற்று முந்துறும் தெய்வம்.
ஊடல் காதலின் கௌரவம் என்ற காதலி நீ.
கூடல் அகவை தாண்டிய பின்னரும் பாடல் உண்டென காதல் காட்டிய கண்மணி.
இன்னுமிருக்கிறது சொல்ல...
இத்துடன் நிறுத்தி வருகிறேன் உன்னருகில்,
இதுவரை நான் எங்கேயும் காணாத காதலை உன்னிடம் கற்க.

நீ யார்?

நான் சிரித்தபோது சிரித்து,
அழுதபோது அழுது,
அப்படியே செய்ய நீ வெறும் காதலியல்ல..

என்னை வழி நடத்திச்செல்லும்
நேர்மறை எண்ணம் நீ
நினைவுகொள்.

காதல் கடிதம்

காதல் கடிதம்
எழுதவேண்டுமென்றுதான்
அமருகிறேன்
ஒவ்வொரு முறையும்.
கவிதைகளாகவே தொடங்குகின்றன
வார்த்தைகள்.

சறுக்கல்

மிக மிக சாதூர்யமாய் தான்
வைக்கிறேன் ஒவ்வொரு அடியும்
உன் இதழ் படிகளில்.

ஆனாலும் வழுக்கி விழுகிறேன்
விழிப்பார்வையால் உன்
இதயக்குளத்திற்குள்.

என்னை நீ...

உன்னைக் காதலியாய் மட்டுமே
பார்த்துக்கொண்டிருக்கிறேன் நான்...
நீயோ என்னைக்
கணவனாக்கி
தகப்பானாகவும் ஆக்கிவிட்டாய்.

காதல் தோல்வி

அடிக்கடி போட்டிவரும்
நமக்குள்
யார் அதிகமாய் காதலிப்பவர் என்று...
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன் நான் உன்னிடம்
உனக்கான காதலோடு.

முதலும் வட்டியுமாய்...

உனக்கான கவிதைகளைக்
கூட்டு வட்டியாய்
சேமித்து கொண்டேயிருக்கிறேன் எனக்குள்.

அத்தனையும் சொல்வேன் உன்னிடம்
முதலாய் உன்னை தந்தால் மட்டும்..
அந்தச் செல்லச் சிணுங்கள்களோடு.