உன் அன்பு நானறிந்த வகையில்...

தாய்பறவையின் பாசம்.
குஞ்சுபொறிக்க அமரும் வைராக்கியமும் பொறுமையும்.
மழலையின் குறிப்பறிந்து மார்கொடுக்கும் தாய்மை.
என்னை உன்னில் காட்டிய கண்ணன்.
என்னிலுள்ள அத்துனை மிருகங்களுக்கும் அடைக்கலம் கொடுத்த கானகம்.
மனம் வருந்திய போது மடங்கி அருகமர்ந்து தலை தடவும் தோழமை.
இன்னலுற்ற போது இதயப்பூர்வமாய் கொடுக்கும் இதம்.
என் சுண்டுவிரல் பற்றி உறுதி சொல்லும் உறுதுணை.
எனது சினத்திலும் சிறிதும் மாறாத உன் அமைதி.
குறும்புகளில் எல்லைமீறும் போதும் சிறுபார்வையால் கட்டிப்போடும் கண்ணியம்.
பேசத்தெரியாமல் தடுமாறிய போதும் பேசவைத்த அரிச்சுவடி.
அதிராத இடிமின்னல்.
இடித்துரைக்கும் ஏமரா மகராணி.
உடுக்கை இழந்தவன் கை.
மடிதற்று முந்துறும் தெய்வம்.
ஊடல் காதலின் கௌரவம் என்ற காதலி நீ.
கூடல் அகவை தாண்டிய பின்னரும் பாடல் உண்டென காதல் காட்டிய கண்மணி.
இன்னுமிருக்கிறது சொல்ல...
இத்துடன் நிறுத்தி வருகிறேன் உன்னருகில்,
இதுவரை நான் எங்கேயும் காணாத காதலை உன்னிடம் கற்க.

1 மறுமொழிகள்:

sathishsangkavi.blogspot.com said...

//இதுவரை நான் எங்கேயும் காணாத காதலை உன்னிடம் கற்க. //

இது புடிச்சிருக்கு...