தமிழமுது

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.
வில்லி தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.
அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லி வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.
வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.
அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது.
பாடலைப் பார்ப்போம்:
"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"
இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்
இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.
-நன்றி: டாக்டர்.எஸ்.ஜெயபாரதியின் http://www.visvacomplex.com/Ekakshara_Verse_of_ArunagiriNathar.html

4 மறுமொழிகள்:

tamilpen said...

vaalga tamil

tamilpen said...

Dr.s.Jeybee,n katturaigal
viyakkaveikindrana.

tamilpen said...

TAMILIN INIMAYAI
TITTIPAGA SAMAITUVEIKKUM
TAMILAMUTHU.

Anonymous said...

arivukku virunthaakhum seitikal thokuththiruppathil makilcci. nandri....